×

மாதவரம் மண்டலம் 24வது வார்டில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் நூலகம், ரேஷன் கடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

 

புழல், மே 5: மாதவரம் மண்டலம், 24வது வார்டில் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டிடத்தில் நூலகம் மற்றும் ரேஷன் கடை அமைக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாதவரம் மண்டலம், 24வது வார்டுக்கு உட்பட்ட புழல் மேட்டு தெருவில் 2022-23 ஆண்டுக்கான வார்டு மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் கட்டப்பட்டு ஓராண்டு முடிந்த நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது.

இந்த கட்டிடத்தை திறக்க வேண்டும், என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் நிலையில் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘24வது வார்டில் நூலகம் இல்லாததால் 23வது வார்டில் உள்ள நூலகத்திற்கு மாணவர்கள் செல்கின்றனர்.

அதேபோல், சுமார் ஒருகிலோ மீட்டர் தூரம் உள்ள புழல் அண்ணா நினைவு நகரில் உள்ள ரேஷன் கடைக்குச் செல்ல சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டியுள்ளது. அப்போது, அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க, புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டிடத்தில் ரேஷன் கடை மற்றும் நூலகம் அமைத்தால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுதொடர்பாக மாதவரம் மண்டல அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

The post மாதவரம் மண்டலம் 24வது வார்டில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் நூலகம், ரேஷன் கடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Madhavaram mandal ,ward ,Puzhal ,Madhavaram ,mandal 24th ward ,Dinakaran ,
× RELATED டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி